ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி ஐ.டி. ஊழியரிடம் ரூ.57 லட்சம் மோசடி

ஐ.டி. ஊழியரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்துள்ளது.;

Update:2026-01-14 15:17 IST

கோப்புப்படம் 

தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயதான வாலிபர், பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ந்தேதி ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது.

மேலும் அதற்கு கீழே வர்த்தக நிறுவனத்தாரின் (போலி) தொலைபேசி எண்ணும் இருந்தது. அதை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதில் பேசிய மர்மநபர் ஒருவர் ஆன்லைன் வரத்தக செயலியில் குறைந்த தொகையை செலுத்தி குறிப்பிட்ட நாளில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய ஐ.டி. ஊழியர் அந்த மர்மநபர் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பணம் செலுத்தி உள்ளார். இதில் ஒரு முறை மட்டும் ஐ.டி. ஊழியருக்கு ரூ.4 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளது. மேலும் அந்த செயலியின் வாலட் கணக்கில் ரூ.4 கோடி லாபம் கிடைத்துள்ளதாக காண்பித்துள்ளது.

இதை நம்பிய ஐ.டி. ஊழியர் மேலும் பல தவணைகளாக மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.57 லட்சத்து 3 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். பின்னர் செயலியில் கிடைத்த லாபத்தொகையை தனது வங்கி கணக்கில் மாற்றுவதற்காக மர்மநபரை ஐ.டி. ஊழியர் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவரது தொலைபேசி எண் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த செயலியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐ.டி. ஊழியர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக ஐ.டி. ஊழியர் பணம் செலுத்திய வங்கி கணக்குகள், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநில வங்கி கணக்குகள் என்று தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்