அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? - நயினார் நாகேந்திரன் பதில்
கடந்த 2021 சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பாமக ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்தசூழலில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மற்றும் பாமகவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 56 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜக பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். சென்னை அல்லது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். தேதி இன்னும் முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பின்னர் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.