இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் அனைவரும் எப்படி விரும்புகிறீர்களோ, அதேபோல் நீங்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நான் விரும்புகிறேன் என நடிகரும், ரேஸருமான அஜித்குமார் கூறியுள்ளார்.
ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு படம் எடுக்கின்றனர். சென்சார் சான்று மட்டும் உடனே கிடைக்க வேண்டுமென்றால் எப்படி நடக்கும்? தற்போதைய சிக்கலுக்கு ஜனநாயகன் படக்குழுதான் காரணம் என தணிக்கை வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட்டு. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவுக்கு பதில்தர பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கவும் உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பாக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜனநாயகன் படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஐபேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணியில் ஈடுபட்டுள்ளார். அமலாக்கத்துறை, மத்திய அரசை கண்டித்து மம்தாவுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கொல்கத்தாவில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகம் பாஜகவின் சொத்து அல்ல, அது அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்காக செயல்படுவதில்லை. மரியாதை என்பது பரஸ்பரமானது. நீங்கள் எங்களை மதித்தால் நாங்களும் மதிப்போம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது பராசக்தி திரைப்படம். தணிக்கை வாரியம் உத்தரவிட்டபடி 25 திருத்தங்களுடன் பராசக்தி படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு முன்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜனநாயகன் பட வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணை என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேம்தா காணொளி வாயிலாக ஆஜராகுகிறார். விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க காலையில் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(ஜன.10) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி என இன்று இரவு 7 மணியளவில் அறிவிக்க உள்ளதாகவும் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
2026 தமிழக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்துள்ளார். இதன்படி அருண்ராஜ், சம்பத்குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கட்சியில் இணைந்த ஜேசிடி பிரபாகர், மயூரி உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.