கரூர் சம்பவம்: கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

அடுத்த கட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-09-29 22:45 IST

சென்னை,

கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மக்களை நேரில் சென்று இதுவரை சந்திக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவம் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை மதியம் முதல் 8:00 மணி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விஜய் கரூர் செல்வது தொடர்பாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்