வி.பி.சிங் நினைவு தினத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உறுதி ஏற்போம்: ராமதாஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தியதால் இந்திய அளவில் "சமூக நீதிக் காவலராக" திகழ்ந்தார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-27 13:28 IST

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் சமூக நீதிக்கு ஆற்றிய பங்களிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தியதால் இந்திய அளவில் "சமூக நீதிக் காவலராக" திகழ்ந்தார். அவரின் சமூக நீதி கொள்கையின் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்து சமூக நீதியை நிலை நாட்டினார். இன்றும் இந்த சமூக நீதி தொடர அவரே காரணம்.

வி.பி.சிங் அவர்கள் என்னுடன் சமூக நீதிக்காக தமிழகம் முழுவதும் இணைந்து குரல் கொடுத்தவர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட ஒதுக்கீடு வேண்டி தொடர்ந்து நான் போராட்டங்கள் நடத்திட எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பாராட்டுகளை தெரிவித்தவர் வி.பி.சிங் அவர்கள்.

சமூக நீதிக்காக அவர் ஆற்றிய பணி என்றும் மறக்க முடியாதது. அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நான் ஆற்றி வருவதற்கு அவருடன் இருந்த நட்பு எனக்கு உறுதுணையாக உள்ளது.

வி.பி.சிங் நினைவு நாளான இன்று சமூக நீதிக்காக வருகின்ற 12.12.2025 அன்று தமிழக மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டு போராட்டம் வெற்றி பெற, சமூக நீதியை நிலை நாட்ட அவரது நினைவு தினத்தில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்