தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.;
சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் 400 தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மேயர் பிரியா பங்கேற்று, அவர்களின் பணியினைப் பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகளை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், திருவான்மியூர், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். மக்களுடைய சுகாதாரத்தை பேணுகின்ற வகையில் இந்த கடற்கரைப் பகுதிகளில் சுத்தம் செய்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கடற்கரைப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தியும், தூய்மைப் பணியாளர்கள் மூலமும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், வாகன ஓட்டுநர்கள், ஒப்பனை அறை சுத்தம் செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட 400 பணியாளர்களின் பணியினை சிறப்பிக்கும் விதமாக மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம் அருகில் இப்பணியாளர்களை சிறப்பிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேயர் பிரியா பங்கேற்று தூய்மைப் பணியாளர்களின் பணியினைப் பாராட்டி, அவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் டிபன் கேரியர், வாட்டர் பாட்டில், புடவை, லுங்கி, துண்டு உள்ளிட்ட தொகுப்பு அடங்கிய நல உதவிகளை வழங்கினார்.
மேலும், இந்த 400 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் மேயர் பிரியா பங்கேற்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.