ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர்.;

Update:2025-11-07 21:18 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று (07.11.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.4.77 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்திற்கான கட்டிடப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ராயபுரம் மண்டலம், வார்டு-55க்குட்பட்ட சண்முகம் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.45 லட்சம் மதிப்பில் 694.02 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஏழுகிணறு தெருவில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.95 லட்சம் மதிப்பில் 2,818 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடைகள், குழந்தைகள் மையம் மற்றும் மாநகராட்சி அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம், மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்நோக்கு மையக் கட்டடத்தினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். இதில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு துறையின் நியாய விலைக்கடைகளிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

பின்னர், வார்டு-54க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.55 லட்சம் மதிப்பில் 1,050 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, வார்டு-58க்குட்பட்ட சூளை, ராஜா முத்தையா சாலையில் உள்ள கண்ணப்பர் திடலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் ரூ.4.77 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகத்திற்கான கட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர், அண்ணாநகர் மண்டலம், வார்டு-99க்குட்பட்ட திடீர் நகர், பிரிக்ளின் சாலையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 புதிய உயர்கோபுர மின்விளக்குகளைப் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர். பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), எச்.ஆர்.கவுஷிக், (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர்கள் பி.ஸ்ரீராமுலு, கூ.பி.ஜெயின், நியமனக்குழு உறுப்பினர் சொ. வேலு, உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் கற்பகவள்ளி, வடசென்னை கூட்டுறவு துணை பதிவாளர் சுதா மாமன்ற உறுப்பினர்கள் ல.தாஹா நவீன், ராஜேஸ்வரி ஶ்ரீதர், பரிதி இளம்சுருதி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்