காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய்-மகள்.. அடுத்து நடந்த பரபரப்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக இருவரும் ஏறி நின்றனர்.;
கோவை மாவட்டம் வால்பாறையில் நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வால்பாறை அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கருமலை இரைச்சல் பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அந்தநேரத்தில் கருமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி, அவரது மகள் பிந்து ஆகிய 2 பேரும் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் அருகே ஓடும் கருமலை ஆற்றின் நடு பகுதியில் உள்ள ஒரு பாறையில் துணி துவைத்து கொண்டிருந்தனர். தங்களை திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர். இருப்பினும் கரைக்கு வர முடியாமல் சிக்கி பரிதவித்தனர்.
காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். சுமார் அரை மணிநேரமாக அபயகுரல் எழுப்பிய நிலையில் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு முடிந்து வெளியே வந்தவர்கள் தாய்-மகள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தேவாலயத்தில் இருந்த பெரிய கயிறை கொண்டு வந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் உதவியுடன் ஆற்றின் பாறை மீது நின்ற தாய், மகளை நோக்கி வீசி எறிந்தனர். தொடர்ந்து அந்த கயிறை தாய்-மகளையும் பிடிக்க வைத்து ஆற்றில் இறங்கி மெதுவாக கரைக்கு வரச்செய்து பத்திரமாக மீட்டனர்.