ஐஸ்கிரீம் கொட்டியதில் மாமியாருக்கும் - மருமகளுக்கும் தகராறு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
அனுப்பிரியாவுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.;
சென்னை,
சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டி அம்மன் நகரை சேர்ந்தவர் அஸ்வின்ராஜ் (30). இவரது மனைவி அனுப்பிரியா (27) இருவரும் கடந்த 2 1/2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
நேற்று வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்த ஐஸ்கிரீம் கீழே கொட்டியதாக தெரிகிறது. இதனால் அனுப்பிரியாவை அவரது மாமியார் இதையெல்லாம் சரியாக கவனிக்கமாட்டாயா? என கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அனுப்பிரியா மனவேதனை அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அஸ்வின்ராஜ் வீட்டுக்கு வந்தபோது காதல் மனைவி அனுப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொன்னேரி ஆர்.டி.ஓ விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாமியார் திட்டியதால் இளம்பெண் அனுப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அனுப்பிரியாவின் விபரீத முடிவால் ஒரு வயது குழந்தை தற்போது அம்மா இல்லாத நிலைக்கு ஆளாகியுள்ளது.