திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-26 12:37 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் 2025-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 22.10.2025 அன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 6 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது.

கந்தசஷ்டி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயிலின் சார்பில் பல்வேறு முன்னேறுபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினாலும், வருகின்ற 27.10.2025 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னெச்சரிக்கை உள்ளபடியாலும், பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தனி நபர் வாகனங்களை தவிர்த்து விட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூரசம்ஹாரத்திற்கென தனியாக ஏதும் வாகன சிறப்பு அனுமதி அட்டை (Vehicle Pass) வழங்கபடவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்