தமிழகம் முழுவதும் இன்று தாள்-2 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.;
சென்னை,
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.) ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளை எழுத தமிழகம் முழுவதும் 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையத்திற்குள் தேர்வாளர்களை காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதன்பிறகு வந்த தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வாளர்கள் மைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையை பார்த்து தெரிந்து கொண்டனர்.
மேலும் நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), அடையாள அட்டை உள்ள தேர்வாளர்களை மட்டுமே தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளா்கள் அனுமதித்தனர். சரியாக 10 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வினை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்வில் முறைகேட்டை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தேர்வறையை கண்காணித்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதேபோல, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான தாள்-2 தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 1,241 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை (தாள்-1) 92 ஆயிரத்து 412 பேர் எழுதினர். 14 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுத வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.