வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம் - விஜய் கண்டனம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.;
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. நேற்று காலையில் இருந்து அவ்வப்போது லேசான மழையும் தொடர்ச்சியாக சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். இதனால், வழக்கமாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் உடனடியாக வடிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் புரசைவாக்கம் டானா தெரு, கொசப்பேட்டை, வியாசர்பாடி, கோடம்பாக்கம், பெரம்பூர், சாலிகிராமம், வடபழனி, கீழ்ப்பாக்கம், தியாகராயநகர், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. வியாசர்பாடி ஜீவா, கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இந்தநிலையில்,வடிகால் வசதிகள் முடிக்கபடாததால் மக்கள் துயரம் என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
என அதில் பதிவிட்டுள்ளார்.