மாநிலங்களவை தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்- முத்தரசன்

வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.;

Update:2025-05-28 13:05 IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தோழமை கட்சிகளின் கருத்துகளை மதித்து, அரவணைத்து செல்வது, மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் சட்டப் போராட்டத்தின் முக்கியத்துவம், கருத்தியல் தளத்தில் சமூக நீதி ஜனநாயக, மதச்சார்பற்ற, பகுத்தறிவு கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம்; கட்சியின் அமைப்பின் உணர்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பொருத்தமானது.

மாநிலங்களவைக்கு செல்லும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய அனைவரும் வகுப்புவாத, மதவெறி சக்திகள் முன்வைக்கும் சவால்களை எதிர்கொண்டு, முறியடிக்கும் போராட்டத்தில், மாநில உரிமைகளை நிலைநாட்டி, கூட்டாட்சி கோட்பாடுகளை உயர்த்தி பிடித்து செயல்பட்டு தனிச் சிறப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற விழைவுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்