ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

16-ம் நாள் காரியத்தில் கலந்துக் கொள்ள ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-24 23:31 IST

கோப்புப்படம்

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ரவுடி நாகேந்திரனின் மற்றொரு மகன் அஜித் ராஜூம் வேறு ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கல்லீரல் பாதிப்பால் அண்மையில் ரவுடி நாகேந்திரன் இறந்தார். இதையடுத்து இவரது இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீனும், அஜித் ராஜ் 3 நாட்கள் பரோலும் வழங்கப்பட்டது. 

இந்தநிலையில், ரவுடி நாகேந்திரனின் 16-ம் நாள் காரியம் வரும் 26-ந்தேதி நடைபெற உள்ளதால், சிறையில் உள்ள அவருடைய இளைய மகன் அஜித் ராஜுக்கு 2 நாட்கள் பரோல் வழங்க கேட்டு நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர், ''தந்தையின் காரியத்தில் மகன் கலந்து கொள்ள வேண்டியது முக்கியமானது என்பதால் வருகிற 26-ந்தேதி ஒரு நாள் மட்டும் பரோல் வழங்குகிறோம்'' என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே, நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமனுக்கு வரும் 28-ந்தேதி வரை இடைக்கால ஜாமீனை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்