அனுமதி இன்றி பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது

அரசு பள்ளி வளாகத்தில் அனுமதி இன்றி பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2025-10-03 07:40 IST

கோப்புப்படம்

சென்னை,

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழாவையொட்டி சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களாக குருபூஜை மற்றும் சாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

ஆனால் அவர்கள் உரிய அனுமதி இன்றி அரசு பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி நிகழ்ச்சி நடத்தியதாக கூறி அவர்களை நேற்று போரூர் போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருடன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 47 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அய்யப்பன்தாங்கலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பா.ஜதனா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கைதான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “வழக்கமாக பயிற்சி செய்யும் இடத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கஞ்சா விற்பவர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியான பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்