சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி; செல்வப்பெருந்தகை கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்.;
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார். விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், அவர் மீது செருப்பை வீசி தாக்க முயற்சித்தார். சனாதனத்தை அவமதிப்பதா? என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் நோக்கி அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், தாக்குதல் நடத்த முற்பட்ட வழக்கறிஞரை வெளியேற்றினர். அதேவேளை, இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாத–பிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும் கேள்விக்குறியாக்குகிறது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது; சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் விரோதமானதாகும்
வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.