தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்
ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் உள்ள அண்ணாமலை ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.;
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகேயுள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் 1984 ஜூன் 4ம் தேதி குப்புசாமி, பரமேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்தார் அண்ணாமலை. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் ெதாடர்ந்து உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்ைம நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 2011ம் ஆண்டு பேட்ச் டாப்பராக இருந்தார். அண்ணாமலை, கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஏழை மற்றும் தகுதியான நபர்களுக்காக ஒரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தை நிறுவினார்.
அண்ணாமலை 2013, செப்டம்பரில் கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா துணைப்பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல்துறை வாழக்கையை தொடங்கினார். பின்னர் அவர் 2015, ஜனவரியில் அதே இடத்தில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். மேலும் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அங்கு எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு 2018ம் ஆண்டு அக்டோபர் வரை எஸ்.பி.யாக பணியை தொடர்ந்தார். பின்னர் அதே ஆண்டு பெங்களூரு தெற்கு துணை காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அவர் தனது பணிக்காலத்தில் முதல்-அமைச்சர்கள் மற்றும் கவர்னர்களிடமிருந்து ஏராளமான விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து அண்ணாமலை 2019ம் ஆண்டு தனது காவல்துறை அதிகாரி பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். 2020 ஆகஸ்ட் 25ம் தேதி காவல்துறையை விட்டு வெளியேறிய பிறகு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர்ராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் தமிழ்நாடு மாநில பாஜக பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2021, ஜூலை 8ம் தேதி பாஐக மாநில தலைவராக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிக்கப்பட்டு 2025, ஏப்ரல் 11ம்தேதி வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
பாஜக சார்பில் அண்ணாமலை 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2023ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி ராமேஸ்வரத்தில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரையை அண்ணாமலை தமிழ்நாட்டில் 105 நாட்கள் 234 தொகுதிகளில் நடத்தினார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து 2025, ஏப்ரல் 12ம்தேதி பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இதனால் அண்ணாமலைக்கு மாநில அளவில் அல்லது தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக வட்டாரத்தில் எழுந்தது.
இந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக, சினிமா மோகத்தை தாண்டி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அப்பகுதியில் உள்ள ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் அரசியலில் சூப்பர் ஸ்டார் K.அண்ணாமலை Ex.IPS, ரசிகர் மன்றம், ஆணைப்பள்ளம், பக்கநாடு என்றும், ரசிகர் மன்றத்தின் தலைவர் A.T.தங்கமணி, இயக்குநர் மற்றும் ரசிகர் மன்றத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.