வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

பாஜக மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8ம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது.;

Update:2025-09-16 13:01 IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாஜக மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8ம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது. இந்த திருத்த சட்ட மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இந்த கூட்டுக் குழுக் கூட்டங்களில் எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த ஆலோசனைகளும், திருத்தங்களும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து வக்பு திருத்தச் சட்ட மசோதா 2025 ஏப்ரல் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி இரண்டாவது நாளில் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசின் முடிவை எதிர்த்து, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், சிறுபான்மையினர் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இந்த முறையீடுகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் தலைமையிலான அமர்வு நேற்று (15.9.2025) “வக்பு சொத்துக்கள் ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள பிரிவுக்கும், வக்பு வாரியத்திற்கு சொத்துக்களை தானமாக அளிக்கும் நபரின் தன்மை குறித்த வரையறுப்புக்கும்” இடைக்கால தடை விதித்துள்ளது. வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரியாக கூடுமானவரை முஸ்லிமை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் தெரிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்