ராமேஸ்வர மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - டிடிவி தினகரன்

மீனவர்களின் போராட்டம் தானே என்ற அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-22 15:49 IST

கோப்புப்படம் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 60-க்கும் அதிகமான மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வைத்திருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகத்தால் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மீன்பிடி தொழிலும் அடியோடு முடங்கியிருக்கும் நிலையில், மீனவர்களின் போராட்டம் தானே என்ற அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்