தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது
இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.;
சென்னை,
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 தேர்வு வருகிற 15-ந் தேதியும் (இன்று), தாள்-2 தேர்வு 16-ந் தேதியும் (நாளை) நடக்க இருக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை தேர்வை நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிந்தது.
ஒரு சிலர் விண்ணப்ப அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டதால், ஹால் டிக்கெட்டுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்தது. இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.