ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே இலக்கு; செங்கோட்டையனை அல்ல - தமிழிசை கலகல பதில்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.;
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கோவையில் முதல்-அமைச்சர் திறந்துவைத்த செம்மொழி பூங்கா நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இதை பாஜக செய்திருந்தால் விமர்சனம் செய்வார்கள். எத்தனை நாள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? அன்பில் மகேஷ் பாடங்களை பார்க்கிறாரோ இல்லையோ, உதயநிதி பாடல் எழுதுகிறார்.
2 பெரிய கட்சிகளை வைத்து அரசியலை எதிர்கொள்கிறோம். ஒன்று மத்தியில் ஆண்டது. மற்றொன்று மாநிலத்தில் ஆள்வது என்றார்.
அதனை தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன்,அண்ணன் செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பது எங்கள் வேலையல்ல. ஜார்ஜ்கோட்டையைப்பிடிப்பதே எங்கள் இலக்கு; செங்கோட்டையனை அல்ல என பதில் அளித்தார். தவெகவில் இணைவது குறித்த தகவலை செங்கோட்டையன், பன்னீர் செல்வம் மறுக்காத நிலையில் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.