தூத்துக்குடி: பாஜக நிர்வாகி உட்பட 3 பேரை தாக்கிய 2 பேர் கைது

காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனது தந்தையுடன் மங்கள விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 பேரையும் 10 பேர் கும்பல் வழிமறித்து சரமாரி தாக்கினர்.;

Update:2025-10-10 21:48 IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கம்ப்யூட்டர் சுரேஷ் (வயது 25). இவர் தனது தந்தையுடன் சம்பவத்தன்று மங்கள விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் 10 பேர் கும்பல் வழிமறித்து சரமாரி தாக்கினர்.

அப்போது அங்கு வந்த காயல்பட்டினம் பாஜக நகர செயலாளர் சுரேஷ், காயமடைந்த இருவரையும் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அவர்களை பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் தாக்கினர். அதனை பாஜக நிர்வாகி சுரேஷ் தடுத்தார். இதனால் அவர் மீதும் கற்களை வீசி தாக்கினர்.

இதில் தலை, முகத்தில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகி சுரேஷ், கம்ப்யூட்டர் சுரேஷ், கணேசன் ஆகியோர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் பாஜக நிர்வாகி சுரேஷ் மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் ஆறுமுகநேரி ராஜாமணியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் அந்தோணி பிரதீப்(23), மிஷன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துசதீஷ்(22), பெருமாள்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கர்(எ) சுரேஷ்(26), ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜேஷ்(22), விவேகானந்தன் மகன் அருள்ராஜ்(21), முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மகராஜன் மகன் நவின்(26) உட்பட 10 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தீவிர தேடுதலில் முத்துராஜேசை சீனந்தோப்பு அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர். நேற்று திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரத்தில் பதுங்கியிருந்த சங்கர்(எ) சுரேசை கைது செய்தனர். இருவரும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த கம்ப்யூட்டர் சுரேஷ், அவரை தாக்கிய கும்பல் மீது கஞ்சா, போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்