தூத்துக்குடி: வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி; தாய் படுகாயம்

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் பெயர் சூட்டு விழாவின்போது திடீரென வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அனைவரும் அலறியடித்து ஓடினர்.;

Update:2025-11-12 19:49 IST

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த ஆனந்த், கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா மகேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு ஆதிரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று காலை இவரது எதிர் வீட்டில் வசித்து வரும் ஜெகன் என்பவரின் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு ராதா மகேஸ்வரி தனது மகள் ஆதிராவை தூக்கி சென்றாராம்.

மதியம் ஒரு மணி அளவில் நடு வீட்டில் அமர்ந்து தனது குழந்தையை மடியில் வைத்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் அனைவரும் அலறியடித்து ஓடினர். அப்போது ராதா மகேஸ்வரி தனது குழந்தையுடன் எழுந்து செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டார். இதில் கான்கிரீட் விழுந்ததில் அவரது குழந்தை ஆதிரா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது. ராதா மகேஸ்வரி தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்