தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், திருமறையூர் ஐ.எம்.எஸ்.நகர் முதல் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் சித்தர்ராஜா டேவிட் சாமுவேல். இவர் மதுரை நாகமலை, புதுக்கோட்டையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகள் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதனால் சித்தர்ராஜா டேவிட் சாமுவேலும், அவர் மனைவியும் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றனர். அவரது வீட்டின் சாவியை தனது மனைவியின் சகோதரர் கிங்ஸ்டனிடம் கொடுத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்க்க சொல்லி சென்றுள்ளனர்.
வழக்கம்போல செடிகளுக்கு தண்ணீர் பாய்க்க சென்ற கிங்ஸ்டன், வீட்டின் முன் கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே போன் மூலம் சித்தர்ராஜா டேவிட் சாமுவேலுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரும் அவரது மனைவியும் உடனே நாசரேத் திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் கிரில் கேட்டில் உள்ள பூட்டை உடைத்து, தேக்கு மரத்தால் செய்யப்பட்ட முன் கதவை ஆணி புடுங்கும் இரும்பு கம்பி கொண்டு கதவை நெம்பி உள்ளே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் வீட்டில் உள்ள இரண்டு படுக்கை அறை கதவுகளையும் இதேபோல கம்பி கொண்டு நெம்பி உடைத்து பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்களை வெளியே எடுத்து போட்டு, பீரோவில் இருந்த 4 கிராம் தங்க கம்மல் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.4,000 பணமும், கைப்பையில் வைத்திருந்த ரூ.1,000 பணமும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சித்தர்ராஜா டேவிட் சாமுவேல் நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்தார்.
அதேபோல் பக்கத்து வீட்டிலிருந்த பாக்யராஜ் என்பவரும் விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளார். அவரது வீட்டிலும் இதே போல கம்பி கொண்டு கிரில் கேட்டை உடைத்து உள்ளே இருந்த மரக் கதவை கம்பி கொண்டு நெம்பி உடைத்து போட்டு உள்ளே சென்றது தெரிய வந்தது. ஆனால் இவர்கள் வீட்டில் எந்த பொருளும் கிடைக்காததால் மீண்டும் கிரில் கேட்டை பூட்டி வெளியே சென்றுள்ளனர்.
இதுகுறித்து நாசரேத் போலீசார் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது நள்ளிரவில் ஒரு நபர் முகமூடி போட்டு கையில் கிளவுஸ் அணிந்து வந்து திருடியது தெரியவந்துள்ளது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து முகமூடி திருடனை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.