ஓடும் பஸ்சில் இருந்து திடீரென கழன்று ஓடிய சக்கரங்கள்: பயணிகள் அலறல்

நடுரோட்டில் அரசு பஸ்சின் டயர்கள் திடீரென்று கழன்று முன்னால் ஓடின.;

Update:2025-10-01 17:30 IST

 திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் வேடசந்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை உண்டாரபட்டியைச் சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 45) ஓட்டி வந்தார். கண்டக்டராக சிவசுப்பிரமணி (50) என்பவர் பணியாற்றினார். அந்த பஸ்சில் 8 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

அந்த பஸ் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் காக்காதோப்பு பிரிவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ்சின் பின் பக்க டயர்கள் இரண்டும் கழன்று ஓடின. இதில் ஒரு டயர் பஸ்சை முந்திக்கொண்டு வேகமாக ஓடி சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

மற்றொரு டயர் பஸ்சை பின் தொடர்ந்து வந்து சாலையோர பள்ளத்தில் விழுந்தது. டயர்கள் இல்லாததால், அந்த பஸ் நீண்ட தூரம் சாலையில் உரசியபடி பெரும் சத்தத்துடன் சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் ‘அய்யோ, அம்மா’ என்று அபயக்குரல் எழுப்பினர். இதையறிந்த டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி, பஸ் பள்ளத்தில் கவிழாதபடி சாலையோரத்தில் நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வேறு எந்த வாகனங்களும் வராமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

எனவே இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பழுதான அரசு பஸ்களை மாற்றிவிட்டு, புதிய பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரகாட்டக்காரன் சினிமா படத்தில் கவுண்டமணி ஓட்டிச்செல்லும் காரின் டயர் ஒன்று கழன்று ஓடுவதை போல் அரசு பஸ்சின் டயர்கள் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்