திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை மற்றும் மகனை ஒருவர் அவரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.;

Update:2025-11-11 20:18 IST

கடந்த 2021-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சினையில், வடக்கு கழுவூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 50) மற்றும் அவரது மகன் வெள்ளத்துரை(22) ஆகிய 2 பேரையும் மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை(42) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணை நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றவாளியான சேர்மதுரைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு, சார்பு நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் இன்று தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு:

IPC 307-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், IPC 324-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை ஏக காலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டாலின், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் (தற்போது டி.எஸ்.பி., தூத்துக்குடி மாவட்டம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ்பால் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை முயற்சி வழக்குகளில், சம்பந்தப்பட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் 1 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இதில் 2 குற்றவாளிகள் சரித்திர பதிவேடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்