திருநெல்வேலி: மோசடி வழக்கில் மூதாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் ஒரு மூதாட்டி, ஒருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்துள்ளார்.;
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு காளிமுத்து என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரை நம்ப வைத்து, மோசடி செய்து ஏமாற்றிய குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செல்லம்மாள் (வயது 69) என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது நாங்குநேரி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் செல்லம்மாள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் பூமிநாதன் குற்றவாளிக்கு நேற்று தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 420-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், IPC 417-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனை, IPC 406-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை ஏக காலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதித்துறை நடுவர் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் களக்காடு காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வனிதா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.