இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

Update:2025-12-31 10:00 IST
Live Updates - Page 2
2025-12-31 07:17 GMT

'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

2025-12-31 06:41 GMT

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகிய தலைவர்களை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

2025-12-31 06:40 GMT

2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி விரைவில் தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பை நெரிசல் இல்லாமல் விநியோகிக்க உணவு மற்றும் கூட்டுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வீடு, வீடாக டோக்கன் விநியோகித்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான டோக்கனும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானதும் தேதி குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும். அனேகமாக, இன்றே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் எவ்வளவு என்ற அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

2025-12-31 06:39 GMT

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

தமிழகம் வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருக்குறளை சமூகத்திலிருந்து எப்படி முடியாதோ அதுபோலதான் திருப்பரங்குன்றமும். இவ்வாறு அவர் கூறினார்.

2025-12-31 06:37 GMT

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2025-12-31 05:32 GMT

கன்னியாகுமரி: 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை அய்யப்பன் சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2026 ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டின் கடைசி நாள் என்பதாலும், அரையாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையாலும் கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

2025-12-31 05:30 GMT

தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2025-12-31 05:28 GMT

புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2025-12-31 05:28 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2025-12-31 05:27 GMT

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்