வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை அமைப்பின் நீதிபதி முகமது குலாம் மோர்டுஜா மஜும்தர் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதேபோன்று, இதே வழக்கில் கோபிந்தகஞ்ச் பகுதியை சேர்ந்த ஷகீல் அகண்ட புல்புல் என்பவருக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், “தாய், தனது மகனை இழப்பது கொடுமையான விஷயம், இதை யாராலும் மன்னிக்க முடியாது, நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை ஆதீனம் வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன்
உளுந்தூர்பேட்டை விபத்து வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனம், வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி ஆஜராகாத நிலையில், ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு 2ஆவது முறையாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்
அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்றைய தினம் 2.07.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் திருபுவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக - அதிமுக இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பாஜக சார்பில் எச்.ராஜா உள்ளிட்டோர் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் - கோவை காவல்துறை அதிரடி
கோவை மாநகர காவல் ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், “கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைக்கக்கூடாது. கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை மாலை 7 மணிக்கு முன்னரே சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இளைஞர் அஜித்குமார் மரணம் - நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் ஆகியவை ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரணை தொடங்க உள்ளது.
திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் பங்களா பயணியர் விடுதி அறையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை அதிகாரியான மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வரும்நிலையில், நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகார், வழக்கின் CSR, FIR ஆவணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி. தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத்தடை
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.
முன்னதாக தனது குடும்பத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.