இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-09-17 09:10 IST


Live Updates
2025-09-17 15:06 GMT

சென்னை - பெங்களூரு டபுள் டக்கர், கோவை ரெயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்டிரல் - பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரெயில் (வண்டி எண் 22625/22626) இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக 2 இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து 23-ந் தேதி முதல் இதேபோல் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்.

இதேபோல், பெங்களூரு - கோவை இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக 2 இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2025-09-17 13:45 GMT

சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயில் 3 ஊர்களில் கூடுதலாக நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்டிரலில் இருந்து செங்கோட்டைக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரெயில் ஒன்று (வண்டி எண் 06121) வரும் 24-ந்தேதி முதல் புதன்கிழமைகளில் வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

அதேபோல், மறுமார்க்கத்தில், 25-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை சென்டிரலுக்கு சிறப்பு ரெயில் (06122) இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் ஏற்கனவே, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக, சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

2025-09-17 13:31 GMT

கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இன்று திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

2025-09-17 13:05 GMT

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். மீண்டும் ஒரு உரிமைப்போர் நடத்தப்படும். இது ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டமல்ல. தமிழகத்திற்கான உரிமை போராட்டம். திமுக நெருக்கடிக்கு பயப்படாது என்றார்

2025-09-17 13:03 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானைகள் நடமாட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்கள் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.

2025-09-17 12:36 GMT

கரூரில் திமுக முப்பெரும் விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

2025-09-17 12:34 GMT

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 3 மாதங்களாக தொடர் சரிவு; அடுத்து என்ன? விரிவான ஓர் அலசல்

இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 5-ல் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு, டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்புகளால், இந்திய ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜி.டி.ஆர்.ஐ.) சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

ஜூன், ஜூலையை தொடர்ந்து ஆகஸ்டு மாதத்திலும் இந்திய ஏற்றுமதியானது தொடர்ந்து 3-வது மாதத்திலும் சரிவை கண்டது. ஜூலையுடன் ஒப்பிடும்போது, 16.3 சதவீதம் சரிவை சந்தித்து, ரூ.58,849 கோடியாக இந்திய ஏற்றுமதி உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த மாதத்திலேயே பெரும் சரிவை இந்திய ஏற்றுமதி துறை சந்தித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டம், ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

2025-09-17 12:02 GMT

நீங்கள் வாங்கும் பொருட்களில் இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இதன்பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டுமென்றால், ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பதே அதற்கான வழியாகும் என பேசியுள்ளார்.

2025-09-17 11:56 GMT

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடக்கம்

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

2025-09-17 11:43 GMT

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் ஆனதாகவும், அவருடைய குழந்தை தனது வயிற்றில் இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடவும் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் “மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட கோர்ட்டு , வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்