ஈரோடு: கோபி அருகே கனமழை வெள்ளத்தால் டி.என்.பாளையம் சாலை தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். முதற்கட்டமாக தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதி அளித்தார்.
விருதுநகர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை நீர்த் தேக்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திமுகவை வீழ்த்த விஜய் அதிமுகவுடன் சேர வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்
இன்றைக்கு ஸ்டாலின் கூட்டணி பலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளார். இன்றைக்கு தி.மு.க.வை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் முடிவு வேறு விதமாக அமைந்து விடும். ஆந்திராவில் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு துணை முதல்-அமைச்சராகி உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். இந்த வாய்ப்பை அவர் நழுவவிடக்கூடாது.
சென்னை அடையாறில் மழைக்கால முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு உள்ள மழைக்கால முகாமில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முகாமில் தங்க வைக்கப்படுபவர்களின் வசதிக்காக உணவுக்கூடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்; கண்காணிப்பு அதிகாரிகள் 12 பேர் நியமனம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞசை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் டெல்டா மாவட்டங்களில் கொள்முதலுக்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தேக்கமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று (அக்.21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 21-.10-2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்களுக்கு தகவல் தெரியும் பொருட்டு இதனை உரிய வகையில் அறிவிப்பு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், நீர்மட்டம் 21 அடியை நெருங்கியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், உபரி நீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஏரியில் இருந்து நீர் திறப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.