பா.ம.க.வின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். ராமதாஸ் கூறிதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்றும் அவர் கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார். அவர்கள் (பா.ஜ.க.) மீது எனக்கென்ன அன்பு இருக்கிறது. எனக்கென்ன தனி பாசம்? என கேள்வி எழுப்பிய அவர், பா.ம.க.வை கைப்பற்ற தி.மு.க. சூழ்ச்சி செய்கிறது என்றார்.
ஒடிசாவின் பூரி நகரில் நடந்த ஸ்ரீஜெகந்தாதர் ரதயாத்திரை நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏலகிரி மலையில் நாளை கோடை விழா நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து நாளை ஒரு நாள் மட்டும் கோடை விழா நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விழா காலை 10.30 மணியிலிருந்து ஏலகிரியில் உள்ள கோடை விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. விழாவின்போது இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா குறித்த கண்காட்சி மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவை கண்காட்சியாகவும், விற்பனையாகவும் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), திருநெல்வேலி (மலைப்பகுதிகள்) ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
விருத்தாசலம்: மஞ்சள்காமாலை பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே தீவளுர் கிராமத்தில் மஞ்சள்காமாலை பாதிப்பால் முத்தமிழ் நிலவன் (12) என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் கடந்த 22ஆம் தேதி 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதால் தீவளூரில் பலருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகமென புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தலுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல்
புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தலுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: விஷம் வைத்து கொல்லப்பட்ட புலிகள் - 6 பேரிடம் வனத்துறை விசாரணை
கர்நாடகா மாநிலம் மகாதேஸ்வரன் மலை புலிகள் காப்பகத்தில் தாய் புலி மற்றும் அதன் 4 குட்டிகளும் விஷம் வைத்து கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லேப்போட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்த அதிகாரிகள், அப்பசுவின் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னாவின் பசு என்றும் தெரிவித்துள்ளனர்.
தனது பசுவை கொன்ற புலிகளை கொல்ல, மற்றொரு பசுவுக்கு விஷம் கொடுத்து வனப்பகுதிக்குள் அனுப்பியநிலையில், புலிகள் அதனை வேட்டையாடி சப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே மர்மமான முறையில் உயிரிழந்த 5 புலிகளின் சடலங்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு எரியூட்டப்பட்டன. புலிகளின் உறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. ஆய்வுக்குப் பிறகு விஷம் வைத்துதான் புலிகள் கொல்லப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும் என மாநில வன அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் (NTCA) விசாரணையை தொடங்கி உள்ளது.
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி தண்ணீர் பயன்பாட்டு அளவில் 83 சதவீதமாக இருக்கிறது.
இந்நிலையில், நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிஐபி (PIB), விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம். நீர் மேலாண்மை மாநில அரசின் கீழ்தான் வரும் என்பதால் கட்டணம் வசூல் என்பது அவர்களது முடிவு. நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே நீர் மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருப்பவருமான `பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் தனி உதவியாளராகப் பணியாற்றிய மு. மகாலிங்கம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக சுற்றுலாப் பயணம் - சுற்றுலாத்துறை ஏற்பாடு
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் கட்டண ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி சென்னை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்த சுற்றுலாவுக்கான செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://www.ttdconline.com என்ற இணையதளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.