திருப்பூரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் கைது
திருப்பூர் சுல்தான் பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களது விசா காலம் முடிந்த பின்னரும் அங்கேயே இருந்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதையொட்டி அமைக்கப்பட்டு வரும் மரப்பாலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.கனிமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பும்ரா ஆடாவிட்டால்.. 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி - ரவி சாஸ்திரி
பும்ராவிற்கு ஓய்வு வழங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது என்றும், பும்ரா ஆடாவிட்டால், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி என்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தபால் நிலையங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி விரைவில் அமல்
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 2025 முதல் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அமலாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக மைசூர், பாகல்காட் பகுதிகளை சுற்றியுள்ள தபால் நிலையங்களில் நடைபெற்ற சோதனை முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி உள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
முன்னதாக ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்து சென்ற மாணவிக்கு, அங்குள்ள உணவக ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஈரானின் தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியதே நான்தான் - டிரம்ப்
ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியதே நான்தான். ஆனால் அதற்கான நன்றி அவரிடம் இல்லை.
இஸ்ரேல் தாக்குதலின் போது அவர் எங்கு பதுங்கியிருந்தார் என எனக்கு தெரியும், இருப்பினும் அவரை காப்பாற்றினேன், இதற்காக அவர் Thankyou Trump என கூறவேண்டிய அவசியமில்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மெட்ரோரெயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து - ஊழியர் காயம்
சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்தில் சிக்கி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.
கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: மேலும் குறைய வாய்ப்பா..?
இன்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டுள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரகோளாறு
மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது.
அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, சென்னை வந்து சேர்ந்தது.
பள்ளிகளில் இனி வாட்டர் பெல் - வெளியான அறிவிப்பு
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 3 மணிக்கு பள்ளிகளில் இனி வாட்டர் பெல் அடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.