இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

Update:2025-05-02 09:06 IST
Live Updates - Page 3
2025-05-02 06:26 GMT

ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம்


சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம். சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.


2025-05-02 06:24 GMT

ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்


நாடு முழுவதும் உள்ள ரேடியோ நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


2025-05-02 06:23 GMT

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை.. அரிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்


ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 4 பேட்ஸ்மேன்கள் ஒரே ஆட்டத்தில் 45+ ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் முதல் முறையாக படைத்துள்ளனர்.



2025-05-02 06:20 GMT

மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதம்


டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையுடன், பலத்த காற்று வீசியது. இதனிடையே. மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.


2025-05-02 06:18 GMT

நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமான 'ஹிட் 3' - எவ்வளவு தெரியுமா?


நானியின் ஹிட்-3 படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 43 கோடி வசூலித்து, நானி கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2025-05-02 06:16 GMT

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் "நோ ஆல் பாஸ்" தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் போட மறுத்து கேள்வி எழுப்ப வேண்டும். 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். 5ம் வகுப்பு மாணவர்களை பெயில் (FAIL) ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்” என்று கூறினார்.

2025-05-02 06:12 GMT

இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா..? - எடப்பாடி பழனிசாமி கேள்வி


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? " என்று கேள்வி எழுப்பி உள்ளார். 


2025-05-02 06:11 GMT

7 ரன்னில் நாட் அவுட் கொடுக்கப்பட்ட ரோகித்.. சர்ச்சையை கிளப்பிய 3-வது நடுவரின் முடிவு


நேற்று நடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 7 ரன்னில் ஆடி கொண்டிருந்தபோது பசல்ஹாக் பரூக்கி வீசிய 2-வது ஓவரின் 5 வது பந்தில் கள நடுவரால் எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்பட்டார். அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவியூ முடிவை எடுத்தார்.

2025-05-02 04:10 GMT

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.

இதன்படி தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-05-02 04:05 GMT

தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் - சின்னத்திரை நடிகை அமுதா விளக்கம்


தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவல் குறித்து நடிகை அமுதா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி. தான் தனது கிராமத்தில் இருப்பதாகவும் தற்கொலை குறித்து பரவி வரும் தகவலை வதந்தி எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அமுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்