ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவு வரவேற்கத்தது என அந்நாட்டு மந்திரி அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.;
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ரேடியோ நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரேடியோ நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவு வரவேற்கத்தது. இந்த தேசபக்திமிக்க செயல் நாட்டின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது.
நாட்டின் கண்ணியத்தையும், இறையாண்மையையும் நிலைநிறுத்தும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியை பாராட்டுகிறோம். தேசிய நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு, ஒற்றுமை, அமைதி மற்றும் தேசபக்தியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஊடக பங்குதாரர்களின் முயற்சிகள் பெருமை அளிக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.