இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-04 09:08 IST


Live Updates
2025-10-04 14:46 GMT

திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் எனது சல்யூட். கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக; திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி ஊர் ஊராக பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். உங்கள் பணி சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. இவ்வாறு அவர் கூறினார்.

2025-10-04 14:16 GMT

7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், கரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-10-04 13:56 GMT

விஷால்-கார்த்தி வெளியிட்ட ‘என்டர் தி டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'என்டர் தி டிராகன்'. இந்த படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார். கதாநாயகியாக சுருதி பெரியசாமி நடித்துள்ளார்ர். வேங்கை கே. அய்யனார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'என்டர் தி டிராகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

2025-10-04 13:35 GMT

வைகோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓரிரு நாட்களில் வைகோ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-10-04 13:33 GMT

விஜய் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணியா? - கே.எஸ்.அழகிரி விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ராகுல் காந்தி தேசிய தலைவர். ராகுல் காந்திக்கு விஜய்யுடன் நீண்ட காலமாகவே தனிப்பட்ட முறையில் பழக்கம் உள்ளது: அதன் அடிப்படையில் விஜய்யோடு ராகுல் காந்தி பேசியிருப்பார். அதற்காகவெல்லாம் விஜய்யோடு காங்கிரஸ் கூட்டு சேரும் என சொல்ல முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு நெருங்கிய நண்பர் என்பதனால் இருதரப்பிலும் ராகுல் பேசினார். எந்த சூழலிலும் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி உடையாது" என்று கூறினார்.

2025-10-04 13:31 GMT

கரூர் துயரம்: விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் விபத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். விஜய் தார்மீகப் பொறுபேற்றிருந்தால் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருக்காது என்றே நான் நினைக்கிறேன். இந்த விபத்தை தவெக திட்டமிட்டு ஏற்படுத்தவில்லை என்றாலும், கரூர் விபத்துக்கான தார்மீகப் பொறுப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் இருக்கிறது.

கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சரின் நடவடிக்கை நிதானமாக இருந்தது. அது அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை காட்டியது. விஜய்யை கைது செய்யக்கோரி குரல்கள் வந்தபோதும் கூட முதல்-அமைச்சர் நிதானமாக கையாண்டர். முதல்-அமைச்சருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை. வருங்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்ற பொறுப்புணர்வுதான் முதல்வரிடம் தென்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

2025-10-04 13:29 GMT

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்ள இருந்தது. இந்த நிலையில் கனமழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு முன்பே போட்டி ரத்து செய்யப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

2025-10-04 12:54 GMT

“புரோ கோட்” டைட்டிலை பயன்படுத்த ரவிமோகனுக்கு ஐகோர்ட்டு அனுமதி

டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று புரோ கோட் (BRO CODE) என்ற டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், 'புரோ கோட்' என்பது தங்களது வர்த்தக முத்திரை. படத்திற்கு இதுபோன்ற தலைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வர்த்தக உரிமைகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது, புரோ கோட் என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிக சின்ன உரிமையை மீறவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவிமோகன் ஸ்டூடியோஸ் புரோ கோட் என்ற டைட்டிலை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என டெல்லி நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-10-04 12:50 GMT

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் (6.10.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி: திருவள்ளுவர்தெரு, சுப்பிரமணியர்நகர், திருமலைநகர், குளக்கரைதெரு, மாசிலாமணிஸ்வரர்நகர், எட்டியம்மன்நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.


2025-10-04 11:54 GMT

தனுஷின் "டி54" படம் வெளியாவது எப்போது?.. ஐசரி கணேசன் கொடுத்த அப்டேட்

போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக "டி54" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு" நடித்துள்ளார். இந்த படம் பிரமாண்டமான பொருட்செலவில், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது.

ஐசரி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, "டி54" படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தினை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்