இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல்... டிடிவி தினகரன் அறிவுரை
தேர்தலுக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வழங்காமல், வருங்கால சந்ததி மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு - மீனவர்கள் நலன் குறித்து ஆலோசனை
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நெற்குணம் கிராமத்தில் உள்ள திருப்பனிசந்துறை நாயனார் கோவியிலில் 900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 'எண்தோளி' என்றழைக்கப்படும் கொற்றவை (துர்கை) சிற்பம் கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலப் புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரெயில்
ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரெயில், பரமக்குடி வந்தபோது ரெயிலை வரவேற்று இஞ்சின் ஓட்டுநர்களுக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சால்வை அணிவித்து மரியாதை செய்தார். ரெயிலில் திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் என்பதற்கு பதில் பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பலகையை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். ராமேஸ்வரம் சென்றடைந்து இதே ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளேன்.
ஆணவக் கொலைகளை தடுக்க ஆணையம்: திருமாவளவன் வரவேற்பு
ஆணவக் கொலைகளைத் தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது. நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்பையில் சட்டமியற்றப்படுமென சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு... ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
குஜராத் மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது. அதற்கு வசதியாக முதல்-மந்திரி பூபேந்திர படேலை தவிர அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 16 மந்திரிகளும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய மந்திரிசபை இன்று காலையில் பதவியேற்றது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா மந்திரியாக பதவியேற்றுள்ளார். குஜராத்தின் முன்னாள் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்வி துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இருமல் மருந்து, கிட்னி முறைகேடு... இந்த அரசு எப்படி மக்களை காக்கப் போகிறது? - எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த 2021-ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்" என்று கூறினார்.