இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

Update:2025-10-17 09:38 IST
Live Updates - Page 2
2025-10-17 11:35 GMT

நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

தமிழ்நாடு சட்டசபையின் 4-ம்நாள் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி தர வேண்டும். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம், அதிமுகவினர் அனுமதி பெற்று தாருங்கள். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது" என்று கூறினார்.

2025-10-17 09:30 GMT

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு

சட்டப்பேரவையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, சாதி ஆணவக் கொலைகளை உறுதியாக தடுக்கும் வகையில், பொருத்தமான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.

2025-10-17 08:12 GMT

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (அக்.17) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-10-17 08:08 GMT

சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணை: இறுதி முடிவு எடுக்க ஐகோர்ட்டு தடை

சாலை, தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சாதிப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

"முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா?" என நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு கேள்வி எழுப்ப, “டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மாற்றம் செய்யும் போது வராத குழப்பம், இங்கே எப்படி வந்துவிடும்" என அரசுத் தரப்பு பதில் அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப்பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் கள ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும் என்றும், அதற்கு மேல் இந்த அரசாணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும் மனு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

2025-10-17 07:59 GMT

ஆணவப் படுகொலை: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ஆணவப் படுகொலை குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணம் இல்லை. எதற்காக நடந்தாலும் கொலை, கொலைதான். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனை கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவதை தடுக்கிறது. சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது.

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும்

இவ்வாறு அவர் கூறினார். 

2025-10-17 07:01 GMT

“டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்..” - சட்டசபையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்

சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசியதாவது:-

கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை.

2019 முதல் 2023ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு அவர் கூறினர்.

2025-10-17 06:49 GMT

கவர்னருக்கு எதிரான மனு; ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பான வழக்கின் முடிவு தெரிந்த பிறகு விசாரிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு


கவர்னரின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


2025-10-17 06:33 GMT

ரெயில் தட்கல் முன்பதிவு தொடங்கியது

முடங்கிய ரெயில்வே இணையதளம் செயல்படத் தொடங்கிய நிலையில் ரெயில் தட்கல் முன்பதிவு நடைபெறுகிறது. சுமார் 40 நிமிடங்கள் இணையதளம் முடங்கியதால் காலை 11 மணிக்கு தொடங்கிய தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை.

அதேநேரம் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கே தொடங்கியது. ரெயில் நிலையங்களில் எளிதாக தட்கல் டிக்கெட் கிடைத்ததால் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

2025-10-17 06:20 GMT

சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்.எல்.ஏ. வேல்முருகன் வாக்குவாதம்


சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனை தொடர்ந்து பேச அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.


2025-10-17 06:04 GMT

எச்சூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்


எச்சூர் கிராமத்தில் 950 ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் அந்த விவசாய நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிப்பை வழங்கி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்