மணிப்பூரின் தடூபி தொகுதி எம்.எல்.ஏ.வும், தேசிய மக்கள் கட்சியின் முக்கிய தலைவருமான என்.காயிசி காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று அரை நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இன்று பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும்.
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக, எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறான தகவலை தெரிவித்துள்ளார். பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அடிப்படை புரிதலின்றி, தவறான குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு, நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட குறைவாகவே கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
திருத்தணியில் கனமழை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், திருத்தணி முருகன் கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பச்சரிசி மலையில் இருந்து ஆறுபோல் மழைநீர் ஓடிவந்தது. கனமழையால், முருகனை தரிசிக்க சென்ற பக்தர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். இதேபோன்று, சரவணப்பொய்கை குளம் அருகே மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப்பினரால கடத்தப்பட்ட பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்புக்கு இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்கலாம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், காசாவில் மீண்டும் போரை தொடங்க அமெரிக்காவின் தற்போதைய மற்றும் புதிய நிர்வாகங்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நெதன்யாகு கூறுகிறார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், மக்கள் சக்தியை வலுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப சக்தியை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். மகா கும்பமேளாவில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பது, நமது நாகரிக வேர்களை வலுப்படுத்துவதுடன், சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மோடி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும், வணிகம் செய்வதை கடினமாக மாற்றியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லியில் பனிமூட்டம் எதிரொலியாக, பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர வேண்டிய 41 ரெயில்கள் இன்று காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், மகாபோதி எக்ஸ்பிரஸ், லிச்வி எக்ஸ்பிரஸ், தட்சிண எக்ஸ்பிரஸ், மால்வா எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியன 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
பூர்வா எக்ஸ்பிரஸ், வைஷாலி எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், பத்மாவதி எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகியன 2 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகவே டெல்லியில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் ரெயில்களின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டு பயணிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
காஷ்மீர் கிராமத்தில் 16 மர்ம மரணங்கள்; மத்திய குழு இன்று ஆய்வு
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் புதல் கிராமத்தில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடந்த 45 நாட்களில் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இது கிராமத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் 16 பேர் மர்ம நோய் பாதிப்புக்கு பலியான சம்பவம் பற்றி ஆய்வு செய்ய, மந்திரிகள் மட்டத்திலான குழு ஒன்றை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அமைத்து உள்ளார். அந்த குழுவினர் காஷ்மீருக்கு இன்று சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கிண்டி, மயிலாப்பூர், சென்னை சாந்தோம், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீர் கனமழை பெய்தது. மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்னை புறநகரில் சாரல் மழையும் பெய்தது.