தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இதுபற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, வெள்ளைக்கொடி ஏந்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பியிருந்த நிலையில், முதல்-அமைச்சர் அதற்கு பதிலளித்து உள்ளார்.
நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தவே டெல்லி பயணம் செல்கிறேன். எந்நாளும் உரிமை கொடியைத்தான் ஏந்துவேன் என்றும் ஊர்ந்து போகமாட்டேன் என்றும் தமிழகத்திற்கான நிதியை போராடி பெறுவேன் என்றும் பதிலளித்து உள்ளார்.
சிவகங்கை, சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள், விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த உதகை மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர் என தோட்ட கலை துறை தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மடுவன்கரை பாலத்தில் காரில் சென்றபோது, மதுபோதையில் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் செந்தில், இன்று காலை தரமணி ரெயில்வே மைதானம் அருகே தீக்குளித்துள்ளார். இதில், பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து உடனடியாக இரு மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பிஎம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாத சூழலில், நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் குண்டுலூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் உஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹயத்நகரில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற கார், சென்னை கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, சாலை பிரிப்பானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அந்த காரில் பயணித்த பெண்கள் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி வரும் நீரின் அளவு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்து பற்றி காவிரி நுழைவிட பகுதியான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.