இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த போட்டியின்போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாளில் இருந்து கோடை விடுமுறை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து குல்காமில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து அளிக்கும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததை அடுத்து, இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அசைவ விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விருந்து உபசரிப்பு நடக்கிறது. பாஜக கூட்டணியை விரும்பாத சில எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த இவ்விருந்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதங்களாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத செங்கோட்டையன் இன்றைய விருந்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
"என்னை பிளாக் மெயில் செய்கிறார்கள்" - யூடியூபர் விஷ்ணு
யூடியூபர் விஷ்ணு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
"எனது சமூக வலைதள கணக்கை ஹேக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். பார்ட்டி என கூறி என்னை அழைத்து திட்டமிட்டு சிக்க வைத்தனர். நான் செய்யாததை செய்ததாக கூறி, பிரண்ட்லியாக பேசியதை தவறாக சித்தரித்துள்ளனர். என்னை கடலில் இறக்கி 2 நாட்கள் சித்திரவதை செய்வோம் என மிரட்டினார்கள். என்னை உயிரோடு விட மாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறினார்.
கேரள பாஜக தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு
குருவாயூர் கோவில் வளாகத்தில் விதிகளை மீறி வீடியோ பதிவு செய்த புகாரில், கேரள பாஜக தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணங்கள் நடக்கும் பகுதி வரை வீடியோ எடுக்க அனுமதி என்ற நிலையில், (அதையும் தாண்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜவுளி நிறுவனங்களிலும், கட்டுமான பணிகளிலும் வேலை செய்து வந்த இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்: அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும்; மத்திய அரசு கொடுக்கும் பதிலடி மிகவும் முக்கியமானதாக இருக்கும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என பேசுபவர்கள் அரசியலுக்காக பேசுகிறார்கள் என்று கூறினார்.
அமைச்சர் பதவி வேண்டுமா?... ஜாமீன் வேண்டுமா? என்று செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்றுசுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.