இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

Update:2025-05-25 09:21 IST
Live Updates - Page 3
2025-05-25 07:54 GMT

பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்

யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்? என யுபிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், 1929இல் தனது சாதிப் பின்னொட்டை நீக்கினார்.  

2025-05-25 07:32 GMT

ஆபரேஷன் சிந்தூர்: மக்களின் குமுறலை வெளிப்படும் நடவடிக்கை - பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்.நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது; நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை என்று 122வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

2025-05-25 07:20 GMT

நிதி ஆயோக் கூட்டம்: வன்மத்தை வெளிப்படுத்தினர்: முதல்-அமைச்சர் ஸ்டாலின்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு - அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்தேன். நிதி ஆயோக் கூட்டத்திற்கு நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள்.நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2025-05-25 06:45 GMT

மறைந்த தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2025-05-25 06:43 GMT

`ரெட் அலர்ட்' - ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடல்

ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 8 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாலை 4 மணிக்குள்விடுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேவையின்றி வெளியேவர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

2025-05-25 06:29 GMT

டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூழ்கியுள்ளன. வாகனங்கள் மழைநீரில் மிதந்தபடி செல்கின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. சாணக்யபுரி, ஐ.டி.ஓ. மற்றும் தவுலா கான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

2025-05-25 06:03 GMT

கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025-05-25 05:29 GMT

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறுகளும் இருந்துள்ளன. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. அதில், அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

2025-05-25 04:59 GMT

டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

அவரை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரவேற்றார். இதேபோன்று, அக்கட்சியை சேர்ந்த டெல்லி முதல்-மந்திரியான ரேகா குப்தா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

2025-05-25 04:32 GMT

குற்றால அருவிகளில் குளிக்க தடை

கனமழை முன்னெச்சரிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்