இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்: விவசாய சங்கம் வலியுறுத்தல்
சிறுபாசன ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நிற்காமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் கைது மோசடி: முதியவரிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்த இருவர் கைது
முதியவரை டிஜிட்டல் கைது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். கடந்த செப்டம்பர் 11-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது ஒரு மோசடி வேலை என்பதை உணர்ந்து கொண்ட முதியவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பணத்தை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், விசாரணையின் முடிவில் ரவி அனந்தா அம்போரே(35) மற்றும் சந்திரகாந்த் ஜாதவ்(37) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்
பிஜாப்பூரில் நடப்பு ஆண்டின் ஜனவரியில் இருந்து, இதுவரையில் மொத்தம் 650 நக்சலைட்டுகள் பொதுவாழ்வுக்கு திரும்பியுள்ளனர். 196 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். 986 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என பிஜாப்பூர் போலீஸ் சூப்பிரெண்டு ஜிதேந்திரா குமார் யாதவ் கூறினார்.
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக... ரூ.300 கோடி நிதி திரட்டிய சித்தராமையா: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
சமீபத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளுக்கு இரவு விருந்து அளித்தபோது இந்த நிதியை திரட்டினார் என்றும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நவம்பர் 15-ந்தேதி சித்தராமையா டெல்லி செல்ல உள்ளார். அவருடைய முதல்-மந்திரி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அதனை காப்பாற்ற போராடும் முயற்சியில் அவர் உள்ளார். நவம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் என்ன புரட்சி ஏற்பட போகிறது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் குறிப்பிட்டார்.
‘பீகாரிலும் வாக்குகளை திருட முயற்சி செய்வார்கள்’ - ராகுல் காந்தி
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்றார்
இந்திய கடல்சார் வாரம் என்ற 5 நாள் சர்வதேச மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், 85-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதோடு, 350-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று கருத்துகளை வழங்குகின்றனர்.
நவம்பர் 5-ல் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.
நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.
சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: காவல்துறை அறிவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 31-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் வழியாக இயக்கப்படும்.
பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது என மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.