விஜய் பிரசாரம்: கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தவெக தலைவர் விஜய் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார்.;

Update:2025-09-28 15:49 IST

சென்னை,

தவெக தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், 2-ம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்ட பிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார்.

நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார். அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணியளவில் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மயக்கம் ஏற்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனித்தனியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைபோல தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உட்பட தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை போலீசார் கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூரை தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் மீது நாமக்கல் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து இடையூறு, அனுமதி இல்லாத இடத்தில் பேனர் வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் சதீஷ் உள்பட பலரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்