குரூப்-4 தேர்வு எழுதி சர்வேயர் ஆனவர்... லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கிய இளம்பெண்

2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதி நில அளவையர் (சர்வேயர்) பணியில் சேர்ந்தார் ஜீவிதா.;

Update:2025-09-18 16:20 IST

சேலம்,

பத்திரப்பதிவு, பட்டா பெயர் மாற்றம், நிலத்தை அளப்பது, வீட்டு வரி ரசிது, மின் இணைப்பு பெறுவது, மின் இணப்பு பெயர் மாற்றம் செய்வது, பட்டா வாங்குவது, வாரிசு சான்றிதழ் வாங்க, ஜாமீன் சான்றிதழ் வாங்குவதற்கு என பல்வேறு அரசு துறைகளில் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். ஆடியோ ஆதாரம் இருந்தாலே கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். கையும் களவுமாக சிக்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டிய நிலை லஞ்சம் வாங்கியவர்களுக்கு வரும். அப்படி ஒரு நிலை சேலம் அரசு ஊழியருக்கு அரங்கேறி உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 28). இவர் கடந்த 2023-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதி நில அளவையர் (சர்வேயர்) பணியில் சேர்ந்தார். தற்போது இவர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உதவியாளராக கண்ணதாசன் (48) என்பவர் உள்ளார்.

இந்த நிலையில் ஆத்தூர் தாலுகா துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன் (52) என்பவர் தான் வீட்டுமனை வாங்கி இருப்பதாகவும், அந்த மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு நில அளவையர் ஜீவிதாவை அணுகினார். அதற்கு ஜீவிதா தனது உதவியாளரை சந்திக்குமாறு கூறினார். அவரது உதவியாளர் கண்ணதாசன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனை பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும் என்று கூறி உள்ளார்.

இதற்காக முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உதவியாளர் கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன் இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை விவசாயி குமரேசனிடம் கொடுத்து சர்வேயரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று சென்ற குமரேசன், லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை நில அளவையர் ஜீவிதா, கண்ணதாசன் ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நில அளவையர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேரையும் கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் பெண் நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்