ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
ஆப்கன் படைகள் 25 பாக்., ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.;
காபூல்,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் தென்கிழக்கு பகுதியிலும் இரண்டு குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இது பாகிஸ்தானுடைய தாக்குதல் என்று அடுத்த நாளே இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறுவது ஆகும் என்றும் கூறியிருந்தது.இதையடுத்து நேற்று இரவு பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆப்கானிஸ்தானின் தலீபன் ஆட்சியாளர்கள்.
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தான் இறையாண்மையை மீறுவது போல செயல்பட்டது. ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தியது.அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் ஆயுதப் படைகள் இரவு டுராண்ட் கோட்டில் உள்ள பாகிஸ்தான் படை மையங்களின் மீது வெற்றிகரமாக பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டன.இந்த ஆபரேஷன் நள்ளிரவில் முடிந்தது. பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறினால், எங்களுடைய படைகள் எல்லைகளைப் பாதுகாக்க தயாராக இருக்கும் மற்றும் சரியான பதிலடியைத் தரும் என்று தலீபான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். தலிபான் வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் படைகளின் ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளோம். கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் தாக்குதல்களை நிறுத்தி இருக்கிறோம். ஆப்கன் படைகள் 25 பாக்., ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளதாக தலீபான் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.