இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்திற்கு காரணம் காஷ்மீர் பிரச்சினைதான் - ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் படைகளும், மக்களும் எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.;
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின.இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. எல்லைப்பகுதியில் போர் நிறுத்த மீறல் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்,மத்திய பாஜக அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று, 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பாகிஸ்தான் இந்த நாளை யூம்-இ-இஸ்தெசல் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்தில் ஒரு பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,
பாகிஸ்தானின் ஆயுதப்படைகளும் அதன் மக்களும் "எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் உறுதியான பதிலை அளிக்கும் திறன் கொண்டவர்கள். இஸ்லாமாபாத் அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவை விரும்புகிறது , மோதலை விட உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தை பாகிஸ்தான் விரும்புகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பமும் விருப்பங்களும் மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கொள்கை. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்திற்கு முக்கிய காரணம் காஷ்மீர் பிரச்சினைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.