ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்

எல்லை அருகே அமைந்துள்ள கிராமங்கள் வழியாக நுழைந்து தலீபான்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-15 16:05 IST

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாடு பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்த்து கொண்டுள்ளது. அந்த எல்லை பகுதிகளில் தெக்ரிக்-இ-தலீபான் பாகிஸ்தான்(TTP) என்ற அமைப்பு அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் தெக்ரிக்-இ-தலீபான் அமைப்பு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் உள்பட பல வீரர்கள் கொல்லப் பட்டனர்.

இதற்கிடையே கடந்த 11, 12-ந்தேதிகளில் ஆப்கானிஸ்தானின் தலீபான் அமைப்பினரும், தெஹ்ரிக்-இ-தலீபான் பாகிஸ்தான் அமைப்பினரும் சேர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, தலீபான் முகாம்கள், பயங்கரவாத பயிற்சி மையங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 23 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர், 29 பேர் காயமடைந்தனர். அதே சமயம், 200-க்கும் மேற்பட்ட தலீபான்கள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள பல்வேறு பகுதிகளில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள கிராமங்கள் வழியாக புகுந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், இதில் சுமார் 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவங்களால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்