10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2024-04-01 05:33 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை பா.ஜ.க. அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்புத்திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...

#பதில்_சொல்லுங்க_மோடி

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்