கைகுலுக்க மறுப்பு: இந்தியாவுக்கு எதிராக புகார் அளித்த பாகிஸ்தான்

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.;

Update:2025-09-15 16:23 IST

image courtesy:BCCI

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.

இந்திய அணியின் இந்த செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவின் அந்த செயலுக்கு எதிராக ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது.

இது பற்றி போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்ட் அவர்களிடம் பாகிஸ்தான் கொடுத்துள்ள புகாரில்,

அவர்களுடைய செயல் விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது. அவர்களுடைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்திலேயே எங்கள் கேப்டன் சல்மான் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்